பத்மஸ்ரீ விருது பெற்ற 'மர மனிதர்' ராமையா காலமானார்..!

கம்மம் மாவட்டத்தில் பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" அல்லது "வனஜீவி ராமையா" என்று பிரபலமாக அறியப்பட்ட தரிப்பள்ளி ராமையா, பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வந்தவர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
ராமையாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, அவரது மறைவு சமூகத்திற்கு "ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று கூறியுள்ளார். இயற்கையும் சுற்றுச்சூழலும் இல்லாமல் மனிதகுலம் உயிர்வாழ்வது சாத்தியமற்றது என்று ராமையா உறுதியாக நம்பியதாகவும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"ராமையா ஒரு தனிநபராக மரம்நடும் பணியைத் தொடங்கி முழு சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்," என ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டியுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வருங்கால சந்ததியினருக்கு திரு. ராமையாவின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று கே.சி.ஆர். தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.