1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் கொள்கையும் அவருடைய கொள்கையும் எதிரானது - சீமான்..!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், கட்சியின் கொள்கை கோட்பாடுகள், செயல் திட்டங்கள் பற்றிப் பேசினார் தவெக தலைவர் விஜய். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என்றார் விஜய்.

மேலும், "கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்," என்றார் விஜய். உலக வரலாறு, மேற்கோள்கள் என எம்பி3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவது எனது அரசியல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார் விஜய்.

இந்த நிலையில், விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என தம்பி விஜய் சொல்வது எங்கள் கொள்கைக்கு நேரெதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. மணியரசன் சொல்வது போல சொல்ல வேண்டும் என்றால், ஒன்று சாம்பார் என சொல்லவேண்டும், இல்லையென்றால் கருவாட்டுக் குழம்பு என்று சொல்லவேண்டும், கருவாட்டு சாம்பார் என்று சொல்லக்கூடாது. விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை.

இது என் நாடு, என் தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். தெலுங்கு தேசம் என்று என்.டி. ராமராவ் பெயர் வைத்தபோது யாரும் எதிர்த்துப் பேசவில்லை. நாங்கள் தமிழ் தேசியம் என்று வைக்கும்போது அதைப் பாசிசம், பிரிவினைவாதம் என்கிறீர்கள். எனவே எங்கள் இருவரின் கொள்கையும் ஒன்றல்ல. திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.

எங்களுக்கு மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. எங்கள் தாய்மொழிதான் எங்களுக்குக் கொள்கை மொழி. எங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மொழிவழி தேசிய இனத்துக்கும் அந்நிய மொழி கொள்கை மொழியாக இருக்கமுடியாது. கெடுவாய்ப்பாக ஆங்கிலேயர் நம்மை ஆண்டதால் இணைப்பு மொழியாக ஆங்கிலம் நமக்குத் தேவைப்படுகிறது. அதைக் கற்றுக் கொள்ளலாம்.

கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு, காலம் எனக்கு இந்த பணியை கொடுத்தது. என் பயணம் என் கால்களை நம்பித்தான். தனித்துதான் போட்டியிடுவேன். யாரோடும் கூட்டணி இல்லை. என் பாதையும், அவரின் பாதையும் வேறு வேறு" என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சீமான் நேர்மறையான பதில்களையே தெரிவித்து வந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன் என்றும் முன்பு தெரிவித்திருந்தார் சீமான். தொடர்ந்து, சீமான், விஜய்யை என் தம்பி என்று குறிப்பிட்டு பேசி வருகிறார். அரசியல் கட்சி ஆரம்பித்தது முதலே விஜய்யை முதல் ஆளாக வரவேற்று கருத்து தெரிவித்து வந்தார். 2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாகவும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் தான், விஜய் கட்சியின் முதல் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், "என் பாதை வேறு, விஜய் பாதை வேறு" எனக் கூறியுள்ளார் சீமான்.


 

Trending News

Latest News

You May Like