1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் நமது கொடி பறக்கும்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

1

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை இன்று வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு நடிகர் விஜய் ஏற்றி வைக்கிறார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (ஆக.22) காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே தலைமையகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நீலங்கரை, கானாத்தூர் காவல் நிலையங்களில் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சொந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதால், விஜய் செல்லும் வழித்தடத்தில் மட்டும் பாதுகாப்பு வழங்க போலீஸார் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் கட்சியின் கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடுவில் விஜய் முகம் இருக்கும் வகையிலான கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like