திமுக எம்பிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு !
திமுக எம்பிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு !

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த கவுதம சிகாமணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடியின் மகனான இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
மேலும், அந்நியச்செலாவணி சட்ட விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் கவுதம சிகாமணி ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8.60 கோடி சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை காரணமாக திமுக மூத்த நிர்வாகிகளும் மற்றும் கவுதம சிகாமணியின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், திமுகவினர் மீது மத்திய அரசின் பிடி இருகிக்கொண்டு செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.