1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ் அடுத்த மூவ் : தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம்!

1

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, வரவேற்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கடிதம் எழுதினார். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, வாசன், ஏ.சி.சண்முகத்திற்குக் கிடைத்த அனுமதி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று முன் தினம் அதிரடியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில் சந்தித்துப் பேசியதும் விவாதப் பொருளாக மாறியது.

இந்த சூழலில் அடுத்த மாதம் 4ஆம் தேதி மதுரையில் நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக ஓபிஎஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தரப்பில் தனக்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மாவட்ட வாரியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 3வது வாரத்தில் அவரது சுற்றுப் பயணம் தொடங்கும் என்றும், தொடர்ந்து நான்கு மாதங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரையும் பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து ஐந்து கட்டங்களாக ஓபிஎஸ் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். தமிழக முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகே தவெகவுடன் கூட்டணியா அல்லது திமுகவுடன் கூட்டணியா என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவுகளை எடுப்பார் என்று அவரது ஆதரவாளர் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே சமயம் அதிமுக கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் வெளியாகும் வரை புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உறுதியாக உள்ளது. ஏனெனில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலைமையில் இருக்கும் போது புதிய கட்சி தொடங்கினால் அது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதமாக அமைந்துவிடும். கட்சியும் தொடங்கக் கூடாது, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதில் ஓ பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். இதற்காக 2024 மக்களவைத் தேர்தல் போலவே தனி அணியாக இருந்து திமுகவுடன் கைகோர்ப்பதிலும் அவர் தயங்கவில்லை.

இதனையே எதிர் முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பின் மூலம் விளக்கினார். மேலும், திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்குக் கூட அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று ஓபிஎஸ் கூறினார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை திமுக ஏற்கத் தயாராக உள்ளதா என்ற கேள்விகளும் உள்ளன.

Trending News

Latest News

You May Like