1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ்-ன் புது நாளிதழ் "நமது புரட்சித் தொண்டன்"..!

1

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சியாக ஜெயா டி.வி-யும் செயல்பட்டு வந்தன. தற்போது நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி ஆகிய நிறுவனங்களை டி.டி.வி.தினகரன், சசிகலா தரப்பு நிர்வகித்து வருகிறது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நமது அம்மா என்ற புதிய நாளேட்டை தொடங்கினர்.

அதில்தான், அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்சி நிகழ்ச்சிகள், கட்சி சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை வெளிவந்தன. அதேபோல, ’நியூஸ் ஜெ’ என்ற டி.வி சேனலும் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியராக மருது அழகுராஜ் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலின்போது, நிறுவனர் பெயரில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் வெளியேறினார்.மருது அழகுராஜ், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், ஓபிஎஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், தங்கள் தரப்பின் குரலை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்க உதவியாக ஊடகத்தைத் தொடங்கத் திட்டமிட்டு வந்தார்.

அந்தவகையில், நேற்று ஓபிஎஸ் தரப்பில் நமது புரட்சித் தொண்டன் என்ற நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.  இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நாளேட்டின் முதல் பிரதியை சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார். , பண்ருட்டி ராமச்சந்திரன் நாளிதழை வெளியிட அதனை ஓபிஎஸ் ஆதரவாளார்கள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும் தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர்.நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும் என  தொண்டர்களின் கோரிக்கையால் தான் நமது புரட்சி தொண்டன் என்கிற நாளிதழை தொடங்கியுள்ளோம்.

எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தில் இருந்து குறைந்துவிடாமல் எதிர் கட்சிகளும் பாராட்டும் விதமாக கருத்துகளை முன்வைத்த அண்ணா வழியில் நமது புரட்சி தொண்டன் நாளிதழ் செயல்படும்.தொண்டர்களிடம் இருந்து ஆண்டு சந்தா பெற்றுள்ளோம். எனவே நீங்களும் நாளிதழில் பங்காளிகள் தான். அதன் படி என்றும் இந்த நாளிதழ் செயல்படும்

எம்.ஜி.ஆர் வகுத்த சட்டம் தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை. தொண்டனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பு, அதற்கு சிறு மாசு ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக தான புரட்சி தொண்டன் நாளிதழ் இருக்கும்.ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதனை உச்சநிலையில் நிறுத்துவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பது நன்கறிவேன்.

நீங்களும் உறுதுணையாக நின்று பணியாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்கும் பத்திரிக்கையாக நமது புரட்சி தொண்டன் பத்திரிக்கை இயங்கும்” என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like