ஓபிஎஸ் புதுக் கட்சி தொடங்க முடிவு? - ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக் குழு தீர்மானம் மூலம் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக போட்ட வழக்குகளில் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்தார்.
அதே சமயம் அதிமுக பெயரில் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அதிமுகவில் உள்ள அணிகளை இணைக்க வேண்டும் என தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக டிடிவி தினகரனுடன் இணைந்து பாஜக தரப்பின் மூலம் பல்வேறு வகைகளிலும் தூது அனுப்பிப் பார்த்தார். ஆனால், அணிகள் இணைப்பு சாத்தியம் இல்லை, ஓபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார்.
விரக்தியில் ஓ.பன்னீர்செல்வம்?
தற்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், அணிகள் இணைப்பு விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என பாஜகவும் நழுவிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் என்றும், தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாகவும் பேசினார்.
இந்த நிலையில்தான் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஓ.பன்னீர்செல்வம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். அதேபோல புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் தனியாகவும் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
புதிய கட்சி தொடங்க ஆலோசனை எனத் தகவல்
ஆலோசனையில், இனி அணிகள் இணைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, தனி அணியாக இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சித் தொடங்கி சீட் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆகவே, தனிக் கட்சித் தொடங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சீட் பெற்று போட்டியிடலாம் என்ற ஆலோசனையை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகிகள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தனிக் கட்சிகள் தொடங்குவது தொடர்பான திட்டத்தை விரைவில் செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இதனால் வரும் ஜூலை மாதம் அம்மா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சிக்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக உதவவில்லை என்றும், அதிமுகவில் இனி இணைவது சாத்தியம் இல்லை என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கினால் அவர் அதிமுகவுக்கு இனி உரிமை கோர முடியாத சூழல் உருவாகிவிடும். அத்துடன், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் அவர் தொடர்ந்த வழக்குகளும் செல்லாததாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.