விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மகன் மனு..!
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம் வெற்றி செல்லாது என அறிவித்தது. இருப்பினும் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பி.ரவீந்திரநாத் மீது சென்னையை சேர்ந்த இளம்பெண் பாலியல் தொல்லை புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கருத்து வேறுபாடு என்ற காரணத்தை கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இருவரும் மனமுவந்து விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என தெரிகிறது. ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால், இதற்கு அவரது மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.