அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்..! ஒரே தொகுதியில் 5 பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்..!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவரான ஓ.பி.எஸ். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போடியிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்பு, ராமநாதபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது. இதனால், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை தடுக்கவே எதிர்கட்சிகள் பன்னீர்செல்வம் பெயருடையவர்களை தேர்தலில் நிற்க தூண்டுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், ஓ.பி.எஸ்-ன் வெற்றியை தடுக்க முடியாது என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் முழக்கமிடுகிறார்கள்.
இந்நிலையில், இன்று மேலும் மூன்று பேர் பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓ.பி.எஸ். தரபுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் என்.டி.ஏ. கூட்டணி கட்சியினர் ஓ.பி.எஸ்-க்கு தேர்தல் பணி செய்வார்களா? என்பதே சந்தேகம் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் அடிப்படுகிறது.
இப்படி இருக்கையில், தினமும் பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தால் அதிமுகவை எப்படி, யார் மீட்பது என அதிமுகவினர் சமூக வலைதளங்களை காமெடி வலைதளங்களாக மாற்றி கலாய்த்து வருகிறார்கள்.