1. Home
  2. தமிழ்நாடு

பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!

1

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று முன்தினம் இன்டியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர இன்டியா கூட்டணி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று இரு அவைகளும் கூடியதும் இன்டியா கூட்டணி சார்பில் சபாநாயகர்களிடம் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான கோரிக்கை கொடுக்கப்பட்டது. மக்களவையை பொறுத்தவரை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கையை முன்வைத்தார். அதில், "நீட் தேர்வு முறைகேட்டால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, நீட் தேர்வு சர்ச்சை குறித்து இந்த அவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்றார் ராகுல்.

ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அந்தக் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதனால், மக்களவையில் இன்டியா கூட்டணியினர் அமளியில் ஈடுபட்டனர். நீட் தேர்வு தொடர்பாக முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அடுத்த அமர்வுக்கு அதாவது திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவையை ஒத்திவைத்தார். முன்னதாக, பகல் 12 மணிக்கு ஒரு முறை இதே காரணங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாநிலங்களவையிலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பாஜக எம்.பி திரிவேதி விவாதத்தை தொடங்க இருந்தார். அப்போதும், மாநிலங்களவை தொடங்கியதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியம் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.  எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பி பூலோ தேவி மயக்கமடைந்தார். அவரை பாராளுமன்ற வளாக மருத்துவர்கள் முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, பிஜூ ஜனதா தளம் கட்சி எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் மவுனம் காத்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இளைஞர்களின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். என்றாலும் இதுபோன்ற தீவிரமான விஷயங்கள் குறித்து பேசும்போது பாராளுமன்றத்தில் மைக்குகளை ஆஃப் செய்து இளைஞர்களின் குரல்களை ஒடுக்கும் சதி நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like