ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!
மண் சரிவு காரணமாக கடந்த 9-ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை நேற்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. 180-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகையை நோக்கி ரயில் புறப்பட்டது.
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரயில் பாதை அமைந்துள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து மலை ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த ரயில் பாதையை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர்.
மேலும் பருவமழை தீவிரம் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கடந்த பத்து நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யபட்டிருந்தது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு நேற்று மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. பத்து நாட்கள் இடைவேளைக்கு பிறகு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த 180-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு குன்னூர் சென்ற நிலையில் அதில் மிகுந்த உற்சாகத்துடன் பயணிகள் பயணித்தனர்.