ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் - இடைக்காலத் தடைக்கு மறுப்பு..!

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகளில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், "இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, "ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள ஆகிய மாநில அரசுகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன.
அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. தற்போது, ஆன்லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழக அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "ஏற்கெனவே இரண்டு மணி நேரம் தடை கோரி வாதிடப்பட்டது. அதை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே, இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்" என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.