ஒரே நாளில் 50 ரூபாய் உயர்ந்த சின்ன வெங்காயம்.. அப்போ மற்ற காய்கறிகளின் விலை..?

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவால் காய்கறிகளின் விலை எகிறியுள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலையை சமாளிக்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு அடுத்த ஷாக் கொடுப்பது போல் வெங்காயத்தின் விலையும் ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மளிகை பொருள்கள் சிலவற்றின் விலையும் உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரே நாளில் ரூபாய் 50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.150 உயர்ந்துள்ளது.
அதே போல கடந்த வாரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.100 -ரூ.130 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.180க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.இதனிடையே இஞ்சியின் விலை ஒரே நாளில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், கேரட் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுவே சில்லறை விற்பனை கடைகளில் அனைத்து காய்கறிகளும் 100-க்கு மேல் விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் செய்வதறியாது உள்ளனர்.