சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை மீட்பு..!
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஒரு வயது ஆண் குழந்தையுடன், நேற்றிரவு (அக்.15) ஒடிஷாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால், ரயில் நிலையத்திலேயே அந்த தம்பதி குழந்தையுடன் தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவு 01.00 மணியளவில் திடீரென எழுந்து பார்த்த போது, தங்கள் குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்த நிலையில், குழந்தை கிடைக்காததால் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நிகழ்விடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வுச் செய்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு, ஆட்டோவில் ஏறியது தெரிய வந்தது. எனவே, அந்த ஆட்டோ எண்ணை வைத்து, ஆட்டோ ஓட்டுநரைக் கண்டுப்பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபரை குன்றத்தூர் பகுதியில் இறக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிரமாகத் தேடிய காவல்துறையினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், “அதிகாலை 02.30 மணிக்கு காணாமல் போன குழந்தை அதிகாலை 06.00 மணிக்கு மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்தியவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்.