மாணவி ஸ்ரீமதி இறந்து ஓராண்டு நிறைவு : மணிமண்டபம் கட்டிய மாணவியின் தாய்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டங்களால் பல சர்ச்சைகளை கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டதை எதிர்த்து, மாணவியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி, ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வந்தார்.
அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ஆயிரத்து 154 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு மாணவியின் தாய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவரிடம் வழங்கப்பட்டன.
மாணவி ஸ்ரீமதி இறந்து ஓராண்டு ஆகிய நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூரில் அவரது குடும்பத்தினர் நினைவு மணிமண்டபம் அமைத்துள்ளனர். ஸ்ரீமதியின் நினைவு நாளை முன்னிட்டு, வலிகளைத் தாங்கி உறங்குகிறாள், உறவுகள் இருந்தும் என்ற வாசகதத்துடன் இடம் பெற்றுள்ள இந்த மணிமண்டபம் குடும்பத்தினரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நினைவு மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தனது மகளின் இறப்பிற்கு உரிய நீதி இதுவரையில் கிடைக்கவில்லை எனவும், இதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவரது தாயார் செல்வி கூறினார்.