1. Home
  2. தமிழ்நாடு

“ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்..!

Q

பேரூர் அடிகளார் எனப் போற்றப்படும் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் மாபெரும் திட்டம் வரும் 20-ஆம் தேதி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. 
இத்திட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (19/03/25) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் பங்கேற்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினர். 
அவர்களுடன் நொய்யல் ஆறு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி மற்றும் கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 
இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், ‘மரங்களின் அரசன் என்று அரச மரத்தை கூறுகிறோம். நம் கலாச்சாரத்தில் அறிவியலை ஆன்மீகத்துடன் சேர்த்து எளிமையாக மக்களுக்கு கொடுத்தனர். ஆனால் மூட நம்பிக்கை என பலவற்றை இன்று நாம் அழித்து வருகிறோம். நம் கிராமங்கள் தோறும் அரச மரங்கள் இருந்தன. அரச மரங்கள் அதிக அளவில் குறிப்பாக 8 முதல் 10 மனிதர்களுக்கான ஆக்சிஜனை வழங்குகின்றன. மேலும் அவை பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருக்கின்றது. 
அதனாலேயே அரச மரத்தடியில் விநாயகரை வைத்து அதனை சுற்றிவரச் செய்யும் வகையில் நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்தனர். ஆனால் பல இடங்களில் அரச மரங்களை அழித்து விட்டோம். ஆகையால் அதனை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் அரச மரங்கள் நட வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்தோம். இதனை பேரூர் ஆதீனம் அய்யா அவர்களிடம் தெரிவித்த போது, அவரின் முழுமையான ஆதரவை தெரிவித்து தமிழகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
நொய்யல் ஆறு அறக்கட்டளை மூலம் பேரூர் ஆதீனம் அவர்கள் நொய்யல் ஆறு சிறப்புற பல செயல்களை செய்து வருகிறார்கள். ஈஷா காவேரி கூக்குரல் இயக்கமும், நொய்யல் ஆறு அறக்கட்டளையும் இணைந்து அடுத்த 5 முதல் 6 வருடங்களில் 2 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் முதற் கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளோம்” எனக் கூறினார். 
இதனைத் தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம் அவர்கள், “அரச மரம் நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது, அரச மரம் ஆக்ஸிஜன் அளிப்பதோடு மகப்பேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது. அரச மரத்தின் குச்சிகளையே கோவில்களில் செய்யப்படும் வேள்விகளில் பயன்படுத்தப் படுகின்றன. அந்த அளவிற்கு ஆன்மீக மற்றும் மருத்துவ பலன்களை அளிக்க கூடியது அரச மரங்கள். இன்று அரச மரங்கள் பல இடங்களில் வெட்டப்பட்டு அருகி வருகின்றன. 
நம் பேரூர் ஆதீனத்தின் “24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்” அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவில் திருப்பணிகள், திருவாசகம் முற்றோதல், சுற்றுச்சூழல் பணிகள் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் மற்றும் நொய்யல் ஆறு அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து பேசிய போது அரச மரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள். 
அதன் படி பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இம்மாபெரும் திட்டம் வரும் 20-ஆம் தேதி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து துவங்கப்பட உள்ளது. 
துவக்க விழாவில் பங்கேற்கும் இளைஞர்கள் அவரவர் கிராமங்களில் அரச மரக்கன்றுகளை நடுவார்கள், மரக் கன்றுகள் நடுவதோடு நிற்காமல் அதனை பராமரிக்கவும் குழுக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் சமயம், பண்பாடு, சுற்றுச்சூழல், உடல் நலம் என அனைத்தும் பாதுகாக்க கூடிய வகையில் இது மரம் நடும் நிகழ்வாக மட்டும் இல்லாமல் ஒரு மறுமலர்ச்சியை மீட்டெடுப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இருக்கும். ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோயம்புத்தூர் கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதற்கட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். 
இதன் துவக்க விழா தவத்திரு சிரவை ஆதீனத்தின் ஆசியோடு, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் திரைப்பட நடிகர் படவா கோபி ஆகியோர்பங்கேற்புடன் நடைபெற உள்ளது.” எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like