ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி...யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் : பிரேமலதா

மக்களவைத் தேர்தலின் போது அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அ.தி.மு.க. ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ம.தி.மு.க. வைகோ, தி.மு.க. திருச்சி சிவா, அ.தி.மு.க. தம்பி துரை, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போதே, தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், தே.மு.தி.க. தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.