செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து - ஒருவர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் என்ற இடத்தில், திருவாரூரில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. விரைவு பேருந்துக்கு முன்னால், அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அரசு விரைவு பேருந்து, அரசு சொகுசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், பேருந்தில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அரசு பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் பயணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதையடுத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
வாரத்தின் முதல் நாளான நேற்று , தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களின், எண்ணிக்கை இயல்பை விட சற்று அதிகமாக இருந்தது. இந்த விபத்தால், மாமண்டூர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.