ஒரே நாடு ஒரே தேர்தல்; அறிக்கையை சமர்பித்தது ராம் நாத் கோவிந்த் குழு..!

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்‘ நடைமுறையை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சகம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள், நிறைகுறைகள் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மாநிலங்ளவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் தலைமை கமிஷனர் சஞ்சய் கோதாரி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்று இருந்தார். ஆனால் இந்த குழு, வெறும் கண் துடைப்பு நாடகம் எனக் கூறி குழுவில் இடம்பெற மறுத்துவிட்டார்.
இந்தக் குழு அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்களைக் கேட்டு ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வியாழக்கிழமை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் ராம் நாத் கோவிந்த் சமர்ப்பித்தார். அதில் குழு பல்வேறு பரிந்துரைகளையும் செய்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடத்த பரிந்துரைத்துள்ளது. அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு முதல் சுற்றிலும், அடுத்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது சுற்றிலும் தேர்தல் நடத்தலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை தடையில்லாமல் நடத்தி செல்வதற்கு பல்வேறு வழிமுறைகளை குழு பரிந்துரைத்துள்ளது. தொங்கு சட்டமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற சூழல்கள் வரும்போது 5 ஆண்டுகளில் மீதமுள்ள காலத்துக்காக மட்டும் தேர்தல் நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முதன் முறையாக நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த, அப்போது ஆட்சியில் உள்ள மக்களவை பதவிக் காலத்துக்கு ஏற்ப சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என பரித்துரைக்கப்பட்டு இருப்பதாகத் கூறப்படுகிறது.
இந்த முறையில் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் தேவையான உபகரணங்கள், மனிதவளம், பாதுகாப்பு படையின் பலம் ஆகியவற்றைப் பற்றி நன்றாக திட்டமிட வேண்டும் என குழு சுட்டிக்காட்டி உள்ளது. தேர்தலுக்காக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடு செய்யவும் பரிந்துரைத்துள்ளது.