ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல்..!
ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அமைச்சரவையின் முன் வைப்பது, சட்ட அமைச்சகத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தது. குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும் குழு முன்மொழிந்தது.
ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் வளங்களைச் சேமிக்கவும், வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், "ஜனநாயகக் கொள்கையின் அடித்தளங்களை ஆழப்படுத்தவும், "இந்தியா, அதுவே பாரதம்" என்பதை நனவாக்கவும் உதவும் என்று குழு கூறியுள்ளது.
தற்போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுள்ளது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன. இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான உயர்மட்டக் குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை. இருப்பினும், இவற்றுக்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும். அவை பாராளுமன்றமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் சில முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்த தனது அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு பாராளுமன்றமன்றம், சட்டமன்றம் ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது தேர்தல் நடைபெறுவதால் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் அவர் கருதுகிறார்.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார். இதன்படி ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் பாராளுமன்றமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.