கடும் எதிர்ப்புக்கு நடுவே தாக்கலாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அமைச்சரவையின் முன் வைப்பது, சட்ட அமைச்சகத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தது. குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும் குழு முன்மொழிந்தது.
ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் வளங்களைச் சேமிக்கவும், வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், "ஜனநாயகக் கொள்கையின் அடித்தளங்களை" ஆழப்படுத்தவும், "இந்தியா, அதுவே பாரதம்" என்பதை நனவாக்கவும் உதவும் என்று குழு கூறியுள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கவும் இக்குழு பரிந்துரைத்தது.
இந்தியாவில் இப்போது லோக்சபா தேர்தலும் பல்வேறு மாநில தேர்தல்களும் தனித்தனியாகவே நடந்து வருகிறது. இதனால் எல்லா ஆண்டுகளிலும் எதாவது ஒரு தேர்தல் என்ற சூழலே நிலவுகிறது.
இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதை ஆய்வு செய்ய மத்திய அரசு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த சூழலில், அந்த பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தி மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இந்தச் சூழலில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அத்துடன் யூனியன் பிரதேச சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாவையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.
சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் நிலையில், அதைத் தொடர்ந்து விரிவான ஆலோசனைக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சட்டத்துறை அமைச்சர் கோரிக்கை விடுப்பார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக பாஜக இருப்பதால் அவர்களுக்கே இந்த கூட்டுக்குழுவின் தலைவர் பதவியையும், பல உறுப்பினர் பதவிகளும் கிடைக்கும். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மாலைக்குள் குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை அறிவிப்பார் எனத் தெரிகிறது.