கோவையில் கைதிகளால் நடத்தப்படும் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் திறப்பு..!

கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் மூலம் ஜெயில் நுழைவுவாயில் அருகே ஏற்கனவே பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்திபுரத்தில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் செல்லும் சாலை சந்திப்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது.
கைதிகளால் நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் ரகுபதி, முத்துசாமி ஆகியோர் பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் தமிழக சிறைத்துறை முதலாவது இடத்தில் உள்ளது. சிறைச்சாலை என்பது தண்டிக்க கூடிய இடமாக இல்லாமல், மன்னிக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஓட்டல்களில் கிடைக்காத உணவு கூட சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு உணவு பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் கூட சிறைவாசிகள் சம்பாதித்து அவர்களது குடும்பத்திற்கு அனுப்பும் வகையில் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது. இவர் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், கோவை ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.