1. Home
  2. தமிழ்நாடு

போலீசாரின் ஒரு தவறு என் வாழ்க்கையை நாசமாக்கியது - சயீப் அலிகான் வழக்கில் கைதான நபர் வேதனை!

Q

மும்பையில் நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்து, கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த, அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். ஆகாஷின் அடையாளம் சந்தேக நபருடன் ஒத்துப்போகவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இவர், போலீசார் செய்த தவறால், வேலை, திருமணம் வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: போலீசாரின் ஒரு தவறு என் வாழ்க்கையை நாசமாக்கியது. அவர்கள் எனது அடையாளத்தை கவனிக்கத் தவறிவிட்டனர். நடிகரின் கட்டடத்தில் இருந்து சி.சி.டி.வி.,யை கைப்பற்றிய நபர் இதனை கவனிக்கவில்லை. இதனால் தனது வேலை, திருமண வாய்ப்புகளை இழந்துவிட்டேன்.
இப்போது நீதி கேட்டு நடிகர் வீட்டிற்கு வெளியே நிற்க திட்டமிட்டு உள்ளேன். நான் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எனது வருங்கால மணப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணப் பேச்சுக்களைத் தொடர மறுத்துவிட்டதாக எனது பாட்டி என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆகாஷின் பாட்டி, துல்சா பாய் யாதவ் கூறியதாவது: ஆகாஷ் மும்பையில் பணிபுரிந்தார். கடந்த சில தினங்களாக எங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவில்லை. போலீசார் அவரைத் தவறாக கைது செய்து காவலில் வைத்த காரணத்தினால், அவரது வேலை பறி போய்விட்டது. இப்போது, நாங்கள் அரசிடம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம், என்றார்.

Trending News

Latest News

You May Like