தமிழகத்தில் பாதுகாப்பு பணிக்கு ஒரு லட்சம் போலீசார் குவிப்பு..!
நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதியான ரிஸ்வான் அலி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ரிஸ்வான் அலி டெல்லியில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளை நோட்டமிட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் மற்ற மாநிலங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கி உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவார். இதையொட்டி போலீஸ் அணிவகுப்பும் நடைபெறும். இதனால் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடல் வழியாக மர்ம நபர்கள் யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.