ஒரு தேங்காய் 52,000-க்கு ஏலம்..! அப்படி அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழாவானது மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழாவானது ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனையும், நகர்வலம் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) திருவிழாவின் பத்தாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கோயில் வளாகத்தில் முருகப்பெருமானின் ’திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி’ நடைபெற்றது.
இதை அடுத்து, தெய்வானை மற்றும் வள்ளிக்கு அடுத்தடுத்து திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக வள்ளி, தெய்வானுடைய மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காயை ஏலம் விடுவதும் வழக்கம். இந்நிலையில் இன்று இந்த தேங்காயை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏலம் விடப்பட்டது.
அந்த ஏலத்தில் பழனி ஆண்டவர், நாகஜோதி தம்பதியினர் 52 ஆயிரம் ரூபாய்க்குத் தேங்காயை ஏலத்துக்கு எடுத்தனர். இதையடுத்து, அவர்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் அறங்காவலர் மற்றும் அறநிலையத் துறையினர் அந்த தேங்காயைத் தம்பதியரிடம் வழங்கினர்.