ஓணம் போட்டியில் அரங்கேறிய சோகம்! தொண்டையில் சிக்கியது இட்லி..!
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும் அமிர்தமும், ஒரு அளவுக்கு மீறினால் நஞ்சாக மாறி மனிதனைக் கொன்றுவிடும் என்பதே இந்த பழமொழியின் அடிப்படை. அது புரியாமல், முட்டாள்தனமாக உணவு உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவதும், பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அதில் மக்கள் பங்கேற்பதும், நம் நாட்டில் நீண்ட காலமாக நடக்கிறது.
அதிக இட்லி சாப்பிடுவது, அதிக புரோட்டா சாப்பிடுவது, அதிக முட்டை சாப்பிடுவது, அதிக பிரியாணி சாப்பிடுவது, குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிடுவது என போட்டிகளை விதம் விதமாக நடத்துகின்றனர். இப்படி நடத்தப்படும் போட்டிகளில் பரிசுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பங்கேற்பவர்கள் ஏராளம். அதிலும், பணம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அப்பாவிகளே அதிகம்.
அப்படிப்பட்ட ஒரு போட்டி தான் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் நடந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, பாலக்காட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதில் கிடைக்கும் பரிசுக்கு ஆசைப்பட்டு பாலக்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் அவசர அவசரமாக இட்லியை சாப்பிட்டுள்ளார்.
அப்போது அவரது தொண்டையில் இட்லி சிக்கியது. போராடியும் இட்லியை விழுங்க முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து சுள்ளிமடை வார்டு உறுப்பினர் மின்மினி கூறியதாவது: சுரேஷ் ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. மூச்சுவிட முடியாமல் திணறினார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து வாளையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். சுரேஷ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.