1996 ஆண்டு இதே நாளில் மெட்ராஸ் சென்னையாக மாறிய தினம் இன்று..!
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று புகழப்பட்டு வரும் சென்னையின் முதல் பெயர் மதராஸபட்டினம். மதராஸப்பட்டினம், மதராஸாகி பின்னர் சென்னையாக மாறியது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் துறைமுகம். இவை இரண்டு தான் சென்னை என்ற மாநகரம் தோன்றுவதற்கான அடிப்படை புள்ளி. தமிழ்நாட்டை மையமாக கொண்டு சென்னையில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய அதிகார மையம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. மிக விரைவிலேயே அந்த கோட்டை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உருவாக்கிய தென்னகத் தலைமையிடமாகவும் மாறியது. சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி சென்னையை முதன்மையான வணிக மையம் என்று பெயரெடுக்க காரணமாக அமைந்தது.
1639 – ஆகஸ்ட் மாதம் 22 ஆம் நாள் மதராஸப்பட்டினம் உதயமானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்த பிறகு அதையொட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட போதிலிருந்து மதராஸபட்டினத்தின் தோற்றம் உருவாக தொடங்கியது. இப்படி படிப்படியாக வளர்ந்த மதராஸப்பட்டிணம் 1688 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கிழக்கிந்திய ராணுவத் தளபதிகள் படை நடவடிக்கைகளுக்கான மதராஸப்பட்டினத்தை பயன்படுத்த தொடங்கினர். பின்னர் பிரிட்டானிய குடியிருப்பு எல்லைக்கு உட்பட்ட நான்கு மகாணங்களில் ஒன்று என்ற பெருமையும் மதராஸபட்டினத்திற்கு கிடைத்தது. பின்னர் மதராஸப் பட்டினம் என்பது பிறமொழி பேசுவோருக்கு ஏதுவாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டது
சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதறாஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது. மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991-ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. 1995-ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே. 1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், 'மெட்ராஸ்' அதிகாரபூர்வமாக 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இருப்பினும் இன்றளவும் மெட்ராஸ் ஐ ஐ டி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பேச்சுவழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.