வரும் 11-ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி..!

அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்குமுக்கிய காரணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாளான 11.9.2023 – திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், வி.எம். ராஜலெட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன், மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அமைப்பு செயலாளர் சின்னதுரை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சதன் பிரபாகர், எஸ். முத்தையா உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இம்மானுவேல் சேகரனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கட்சியின் உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந் திரளான அளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.