1. Home
  2. தமிழ்நாடு

தமிழக, கேரள எல்லையில்... கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு..!

1

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதனா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிகளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துக்களை ஆய்வு செய்தபோது எச் 5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. 

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை, குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் ஆனைகட்டி, வாளையாறு உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கேரளாவில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களுக்கு கிருமி நாசினி  தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like