அடுத்த மாதம் 26-ம் தேதி ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை..!
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி 26-ம் தேதி பிற்பகல் உரை நிகழ்த்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.
இதில் முக்கியமாக நியூயார்க் லாங் தீவில் உள்ள நசாவு கொலிசிய மைதானத்தில் செப்டம்பர் 22-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி இருந்தார். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.