விதி மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள்...30 சிறப்புக் குழுக்களை அமைத்த தமிழக அரசு..!
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். பொங்கல் விடுமுறையோடு சேர்த்து வரும் ஜனவரி 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜனவரி 14 முதல் 19 ஆம் தேதிவரை 6 நாட்களுக்குத் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். பொங்கல் விடுமுறையை ஒட்டி அரசு சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அரசின் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாளில் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்வதால், ரயில், அரசுப் பேருந்துகள் போன்றவை போதாத நிலைதான் உள்ளது. எனவே ஏராளமானோர் ஆம்னி பேருந்த்களிலும் பயணம் செய்கின்றனர்.
எனினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்மீது அபராதம், சிறை வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்குப் போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.
இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்தச் சிறப்புக் குழுக்கள் செயல்படும்.
இந்தக் குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, பர்மிட் சஸ்பெண்ட், பேருந்து சிறை வைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.