ஒமைக்ரான் பரவல்.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..?

அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 15-ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது தற்போது உள்ள நிலை தொடரலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.