தமிழகத்தில் ஒமைக்ரான்.. யார் சொல்வது உண்மை..?: கேட்கிறார் இபிஎஸ்..!

கொரோனா பாதிப்பு விவகாரம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது அலை அதிக அளவில் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது. இதை அரசு கவனத்தில் வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இதனால், மூன்றாவது அலையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மிதமான நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள், ஆக்சிஜன் அளவு 92க்கு மேல் உள்ளவர்கள், அவரவர் வீடுகளில் 6 அல்லது 7 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொற்று ஏற்பட்டவர்களில், 85 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் ஏற்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், நேற்று முன்தினம் மாலை சுகாதாரத் துறை அறிக்கையில், 800 பேர் தான் ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
இதில் அமைச்சர் பேட்டி உண்மையா? சுகாதாரத்துறை அறிக்கை உண்மையா? பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டுமா? அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா?
வீட்டில் தனிமைப்படுத்த முடியாதவர்கள் எங்கு செல்ல வேண்டும் என தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர். தொற்று அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்குக்கு அவசியமில்லை.
ஒமைக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை. ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் சென்றால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் அறிக்கை வெளியிடக் கூடாது.
ஒவ்வொரு வார்த்தைக்கும் தானே பொறுப்பு என்ற உணர்வுடன் அமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தக் கூடாது.
அதேசமயம், உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு. தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்துவது, அரசின் தலையாய கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.