இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 143ஆக உயர்வு!!
நாட்டில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரானும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் வந்துள்ள இந்த வைரஸ் பல மாநிலங்களிலும் தொடர்ந்து பரவி வருகிறது.
அந்தவகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 113 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என நேற்று 30 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர்.
இதன் மூலம் நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்து விட்டது. இதற்கிடையே, நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா 3ஆவது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய கொரோனா சூப்பர்மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3ஆவது அலை ஏற்பட கூடும் என கணித்துள்ளார்.
தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் மக்களிடம் உள்ளது. அதனால், 2வது அலையை விட இந்த அலை லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 3ஆவது அலை நிச்சயம் ஏற்படும் என்றும் அப்போது தினசரி பாதிப்பும் உறுதியாக உயரும் என அவர் கூறியுள்ளார். அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
newstm.in