ஒமைக்ரான் பரவல்.. தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு..!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஒமைக்ரான் பரவல் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும். பள்ளிகளில் கட்டாயம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது. இறைவணக்கம், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறை வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த முதல் உத்தரவு இதுவாகும்.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செப்டம்பர் 1-ம் தேதி தான் திறக்கப்பட்டன. 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது. அதற்குள் ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.