கட்சித் தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு..!
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்.8-ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பின்பு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தேசிய மாநாட்டு கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி காங்கிரஸ், சிபிஐ-(எம்), பேந்தர்ஸ் பார்ட்டி) கட்சியினருடனான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் முதல்வாரக தேர்வாகியிருக்கும் உமர் அப்துல்லா கட்சியினருக்கு தனது நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸிடமிருந்து ஆதரவு கடிதம் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனிடையே நான்கு சுயேட்சை எம்எல்ஏ-க்களும் தங்களின் ஆதரவை தேசிய மாநாட்டுக் கட்சிக்கு தந்துள்ளனர். இப்போது எங்களின் எண்ணிக்கை 42+4. காங்கிரஸிடமிருந்து கடிதம் பெற்றதும் ராஜ் பவனுக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்” என்று தெரிவித்தார்.
10 வருடங்களுக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், சிபிஐ-எம் 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.