குழந்தை பிறந்த 3 வாரத்தில் பணிக்கு திரும்பிய அதிகாரி.. குவியும் பாராட்டு !

குழந்தை பிறந்த மூன்று வாரத்தில் பணிக்கு திரும்பிய அதிகாரியின் பொறுப்புணர்வை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி சவும்யா பாண்டே என்பவர் சமீபத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த சவும்யா பாண்டே பெண் குழந்தைக்கு தாயானார்.
இந்நிலையில் ஆறு மாதங்கள் பெரும்பாலானோர் பிரசவ விடுப்பு எடுக்கும் நிலையில் 22 நாள்களில் சௌம்யா பாண்டே, கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளார். .அவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், நான் ஐஏஎஸ் அதிகாரி. ஆகவே என் வேலையைக் கவனிக்கவேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குமான வலிமையைக் கடவுள் பெண்களுக்குக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் நெருங்கும் வரைக்கும் வீட்டுவேலைகளையும் வாழ்வாதார பணிகளையும் செய்து வருகின்றனர். பேறுகாலத்திற்குப் பின்பு குழந்தையையும் வீட்டுப் பொறுப்பையும் கவனிக்கின்றனர்.
அதேபோன்று கடவுளின் அருளால் நான் என் மூன்று வார மகளோடு நாட்டுப்பணியையும் கவனிக்க முடிகிறது. என்னுடைய குடும்பத்தினர் எனக்கு அதிக உதவி செய்கின்றனர் என்று சௌம்யா பாண்டே கூறியுள்ளார்.
பெண் அதிகாரிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சரியான ஓய்வுக்கு பிறகு பெண் அதிகாரி பணிக்கு வர வேண்டும் எனவும் சிலர் அன்பாக தெரிவித்துள்ளனர்.
newstm.in