தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு..!
தவெகவின் தலைவராக விஜய்யும், தலைமை நிலைய பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் செயல்பட்டு வருகிறார். மேலும் ஒருசில பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனரே தவிர முக்கிய பொறுப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தான் தவெகவின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறுகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு ஏற்ப வாகன நிறுத்துமிடம், கழிவறை, குடிநீர் வசதிகளுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
காவல் துறையினர் மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், கண்கொத்தி பாம்பாக கவனிக்க உள்ளனர். இந்த நிலையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நடிகர் விஜய் 27 குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தவெக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நமது தலைவர் விஜய் அறிவித்தபடி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தலைவர் விஜய்யின் ஆணைப்படி, சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொகுதி பொறுப்பாளர்களின் லிஸ்ட்டும் வெளியிடப்பட்டு உள்ளது.