ஆபாச பேச்சு சர்ச்சை..! ஷைனாவிடம் மன்னிப்புக் கோரிய உத்தவ் கட்சி எம்.பி..!
பாஜகவில் இருந்து சிவ சேனா கட்சிக்கு மாறிய ஷைனா என்சி, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மும்பாதேவி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், இந்த தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான அமின் படேல் மீண்டும் போட்டியிடுகிறார். அமின் படேலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி அரவிந்த் சாவந்த், “அவரது (ஷைனா என்சி) நிலையைப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் பாஜகவில் இருந்த அவர், இப்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இங்கே ‘செக்ஸ் பாம்’ வேலை செய்யாது” என விமர்சித்தார்.
அரவிந்த் சாவந்த்தின் பேச்சுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பால் தாக்கரே இருந்திருந்தால் இந்நேரம் அரவிந்த் சாவந்த்தின் முகத்தை உடைத்திருப்பார் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அரவிந்த் சாவந்த்தின் பேச்சுக்கு எதிராக ஷைனா என்சி நாக்பாடா காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து, பிரிவுகள் 79 மற்றும் 356(2) இன் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
தொடக்கத்தில் தான் தவறாக பேசவில்லை என்றும் ஷைனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றும் பேசி வந்த அரவிந்த் சவந்த், தனது பேச்சுக்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சாவந்த், “யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இருந்தும் ஒரு பெண்ணை அவமதித்துவிட்டேன். என் வாழ்நாளில் இப்படிச் செய்ததில்லை. நான் ஆபாச அர்த்தத்தில் பேசவில்லை. எனினும், நான் அந்த அர்த்தத்தில் பேசியதாக பலரும் என்னை குறிவைக்கிறார்கள். நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அவரது மரியாதையை முடிவு செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரவிந்த் சாவந்த்தின் பேச்சு அம்மாநில அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியது. தனது பேச்சின் மூலம் ஒட்டுமொத்த பெண்களையும் அரவிந்த் சாவந்த் அவமதித்துவிட்டார் என ஷைனா என்சி குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அரவிந்த் சாவந்த் மன்னிப்பு கோரி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.