1. Home
  2. தமிழ்நாடு

புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு அவலங்களை மூடி மறைக்கும் திமுக - ஓ பன்னீர்செல்வம்..!

1

ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உலகத்தில் உண்மை பேசுவதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்கிறது திருக்குறள். ஆனால், பொய் பேசுவதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு புளுகு மூட்டைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. செய்யாததை செய்ததாகக் கூறுவது, நடக்காததை நடந்ததாகக் கூறுவது, அவலங்களை மூடி மறைப்பது போன்றவை தி.மு.க. அரசின் கொள்கைகளாக தற்போது விளங்கிக் கொண்டிருக்கின்றன.



கொரோனா காலத்தில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 44 மாதங்கள் கடந்தும் இதுவரை யாருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடுதான் வழங்கப்படவில்லை என்றால், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

இது குறித்து, குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இது குறித்து 10-12-2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, "டாக்டர் விவேகானந்தன் அவர்களுக்கு இரண்டு துணைவியர்கள் இருக்கின்றார்கள். அந்த dispute court-ல் இருக்கிறது, அவர்கள் அம்மாவும், இரண்டு மனைவிகளும் கேட்கிறார்கள்" என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதில் உண்மையில்லை என்று மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் குடும்பத்தினரும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் தெரிவித்த நிலையில், இதுகுறித்து மேற்கொண்டு எந்தப் பதிலையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவிக்கவில்லை. 'மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி' என்பார்கள். இதன்மூலம், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தவறான தகவலை அவைக்கு அளித்துள்ளார் என்பது நிரூபணமாகிறது.
இதேபோன்று, 2020 ஆம் ஆண்டு டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவர்கள் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அண்மையில் தெரிவித்தார்.
 

இது மட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க அரசு தயாராக இருந்தபோது, அவர்கள் ஏற்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு மறைந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினரும், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவிர, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தனர். இந்தப் பிரச்சனையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசி வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் வாக்குறுதிகளில் 99 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்றும் 13-09-2023 அன்று அறிவித்தார். சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தமுள்ள 505 வாக்குறுதிகளில் 383 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். இதன்படி பார்த்தால் 76 விழுக்காடு வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள்.

மாண்புமிகு முதலமைச்சருடைய கூற்றிலிருந்தே இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். தற்போது திருநெல்வேலி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், சி.டி. ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக அங்கிருந்த பயிற்சியாளர் ஒருவர் ஊசி போட்டதன் காரணமாக தென்காசியை சேர்ந்த நான்கு வயது சிறுவன் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளான். இந்தச்
சிறுவன் உயிரிழந்ததற்கு மேற்படி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததே காரணம் என்று அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அந்தச் சிறுவனுக்கு ஊசி போட்டது யார் என்பதைக் குறிப்பிடாமல், ஊசி ஒவ்வாமை காரணமாக அச்சிறுவன் உயிரிழந்துள்ளான் என்ற கூறி இருப்பது முழுப் பூசணிக்காயை மறைப்பதுபோல் உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மற்றுமொரு புளுகு மூட்டையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவிழ்த்து விட்டு இருக்கிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இனி வருங்காலங்களிலாவது, தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்திவிட்டு, உண்மையை மக்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.. இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like