செவிலியர் நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்தாக வாய்ப்பு இல்லை..? தண்டனை நிறைவேற்றப்படும் நாள் மட்டும் தள்ளி போக வாய்ப்பு..!
ஏமன் நாட்டில் தனது கணவர், குழந்தை ஆகியோருடன் அங்கேயே வசித்து வந்தார் கேரளா மாநிலம், கோட்டையத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா. இந்த நிலையில், தலால் அப்தோ மஹ்தி என்பவருடன், நிமிஷா பிரியா கூட்டு சேர்ந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தனர். அப்போது, அவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையில், தலால் அப்தோ மஹ்திக்கு மயக்க ஊசியை நிமிஷா பிரியா செலுத்தினார். இதில், அதிகளவிலான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அதன்படி, அவருக்கு ஏமன் நாட்டுநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த மரண தண்டனை இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அவரது மரண தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தலால் மஹ்திக்கு நிமிஷா பிரியா அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து அவரது உடலை துண்டாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், நிமிஷா பிரியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தலால் மஹ்தி தன்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், பணத்தை பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். ஆனால், இந்த கருத்துக்கு அப்தெல் ஃபத்தா மஹ்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், நிமிஷா கூட தன்னுடைய பாஸ்போர்ட்டை தலால் மஹ்தி பறித்துக்கொண்டதாக கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி கூறியதாவது: நிமிஷா பிரியாவின் வழக்கறிஞர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் கடவுளின் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அதை விட குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதாவது, நிமிஷாவை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்துவது குறித்து ஏமன் சிறை நிர்வாகம், வழக்கு விசாரணை அலுவலகத்துடன் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக மரண தண்டனை தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை அறிவிப்பு வெளியான பிறகு, அவரது குடும்பத்தினர் இந்திய அரசிடம் உதவி கோரினர். அதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி, இரு தரப்பினர் இடையே பரஸ்பர உடன்பாடு எட்ட கூடுதல் அவகாசம் கிடைக்க உதவும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏமனில் நிமிஷா வழக்கு தொடர்பான அதிகாரியான சாமுவேல் ஜெரோம் கூறுகையில், நிமிஷா பிரியா வழக்கில் எல்லாம் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல செய்திகள் வர உள்ளது. ஆனால், அது நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியாக இருக்காது. மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் மட்டுமே ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்தார்.