நேற்று தொடங்கப்பட இருந்த என்டிஆர் பரோசா ஓய்வூதியம் திட்டம் திடீர் ஒத்திவைப்பு..!
முதல்வராக பதவி ஏற்ற உடனேயே தனது வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.அதன் ஒரு பகுதியாக என்டி ராமாராவின் பெயரை மேம்படுத்தும் வகையில் என்டிஆர் பரோசா ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். என்.டி.ராமராவ் தலைமையில் 1994-95ஆம் ஆண்டு ஏழைகளுக்கு மாதம் 35 ரூபாய் என ஓய்வூதியம் வழங்கத் தொடங்கினார். அந்த திட்டம் மேம்படுத்தப்படும் என அறிவித்த சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் பரோசா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஏற்கனவே 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 ரூபாய் உயர்த்தப்பட்ட 4000 ரூபாயாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஒவ்வொரு பயனாளிக்கும் ஜூலை மாத ஓய்வூதியம் ரூ .4,000 மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1,000 உட்பட 7,000 ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று பிற்பகல் 2 மணிக்கு கர்னூல் மாவட்டம் ஓர்வக்கல் கிராமத்தில் சில பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓய்வூதியத்தை வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையிவ் ஆந்திர மாநிலத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையால் ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு கிராம மற்றும் வார்டு செயலக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவதில் இருந்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அவகாசம் அளித்துள்ளார்
இதுகுறித்த ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக என்டிஆர் பரோசா ஓய்வூதிய தொகை வழங்க முடியாத பயனாளிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த்துள்ளார்.
ஓய்வூதியத்தை இன்றே வழங்க வேண்டும் என்றோ அல்லது அதற்கான இலக்குகளை நிர்ணயிக்கவோ ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.