1. Home
  2. தமிழ்நாடு

‘என்பிஎஸ் வாத்சல்யா’ குழந்தைகளுக்கான திட்டம்..! 50,000 செலுத்தினால் ரூ.25 லட்சம் கிடைக்கும்..!

1

‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும், அவர்கள் அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டமானது தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் அங்கமாகும். இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும். அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் ‘என்பிஎஸ் வாத்சல்யா' கணக்கைத் தொடங்கலாம். வங்கிகள், இந்தியஅஞ்சல் அலுவலகம் மூலமும் இதற்கென்று உருவாக்கப்பட்ட தளம் மூலமும் ‘என்பிஎஸ் வாத்சல்யா' கணக்கைத் தொடங்கலாம்.

ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 என இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் மூன்று ஆண்டுகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அதன் பிறகு கல்வி, மருத்துவ காரணங்களுக்காக சேமிப்பில் 25 சதவீதத்தை திரும்பப் பெற முடியும். அதிகபட்சமாக மூன்று முறைபணத்தை பெறலாம். 18 வயது நிரம்பிய பிறகு சேமிப்பை தடையின்றி எடுக்க முடியும். அதேபோல், சேமிப்பை தேசிய ஓய்வூதியக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு ரிட்டன்ஸ் கிடைக்கும்.!

ஒரு பெற்றோர் மாதம் ரூ.1,000-ஐ 18 வருடங்களுக்கு முதலீடு செய்தால், 18 வருடத்தில் ரூ.2,16,000 முதலீடு செய்திருப்பார்கள். அதற்கு வட்டியாக ரூ.6,32,718 கிடைக்கும். 18 வயது முடியும் பொழுது, மொத்த கார்ப்பஸ் ரூ.8,48,000 ரூபாயாக இருக்கும். விதிமுறைகளின் படி 80% மறு முதலீடு செய்ய வேண்டும். அதாவது ரூ.6,78,400 மறுமுதலீடு செய்து, ரூ.1,69,600 திரும்ப பெற முடியும். மறு முதலீடு செய்யப்படும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

குழந்தை பிறக்கும் போது அதனுடைய பெயரில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தனது பருவ வயதை எட்டி, தாமாக வருவாய் ஈட்டி, சந்தா தொகையை செலுத்தினால், அவருடைய ஓய்வு வயதின்போது (60 வயது) ரூ.12.5 கோடி வரை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் குழந்தையின் மேற்படிப்பு, குறிப்பிட்ட வகை உடல்நலக் குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகளுக்காக, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை 3 முறை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

 

Trending News

Latest News

You May Like