இனி குறைந்த செலவில் மருந்து வாங்கலாம்! கோவையில் முதல்வர் மருந்தகம் ஆரம்பம்..!

பொதுமக்கள் நலனுக்காக குறைந்த விலையில் தமிழகத்தில் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் மொத்தம் 1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று துவங்கப்பட்டன.
இதை தமிழக முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். அண்மை தகவல் படி கோவையில் 40+ முதல்வர் மருந்தகங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில் வாங்கும் மருந்துகள் மீது பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கவிழாவில் முதலமைச்சர் பேசுகையில், கல்வி மருத்துவம் ஆகிய இரண்டும் இந்த திராவிட மாடல் அரசின் இரு கண்கள். இந்த அரசு சாதாரன, சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்க்கு அடையாளம் இந்த முதல்வர் மருந்தக திட்டம். இதில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது, என்றார்.
சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு மாத்திரைகள் வாங்கும் பொது மக்கள் அதிகம். இதற்கு அவர்களுக்கு ஏற்படும் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்களை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளர்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியுள்ளது.
இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள B.Pharm., D.Pharm படித்த நபர்களிடம், அல்லது அவர்கள் ஒப்புதல் உடன் தொழில்முனைவோர்/கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம், கூட்டுறவு சங்கத்திற்கு ரூ. 2 லட்சம் மானியம் கொடுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பணம், மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கேற்ப்ப உடனடியாக அனுப்பக்கூடிய வகையில் மாவட்ட மருந்துகிடங்கில் இருந்து 3 மாதங்களுக்கு தேவையான இருப்பு பராமரிக்கப்படுகின்றது. 38 மாவட்டங்களிலும் மாவட்ட மருந்து கிடங்குகள் அணைத்து உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என முதலமைச்சர் கூறினார்.
இத்துடன் மருந்துகள் குறித்த தேவைப்பட்டியால் பெறப்பட்டு 48 மணி நேரத்தில் மருந்துகள் வாகனம் மூலம் அனுப்பி வைக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்களில் பணியாற்ற மருந்தாளர் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் B.Pharm., D.Pharm படித்த 1000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
இது குறித்து கோவை கே.கே.புதூர் பகுதியில் முதல்வர் மருந்தகம் துவங்கியுள்ள சரவணக்கண்ணன் கூறுகையில்:-
இதற்கு முன்னதாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தேன். பல காலமாக தனியார் நிறுவன ஊழியராக இருந்த நான் தனியாக பிஸ்னஸ் செய்யவேண்டும் என முடிவெடுத்தேன்.
அப்போது முதல்வர் மருந்தகம் பற்றி முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை பற்றி கேள்விப்பட்டு, கூட்டுறவு சங்க அலுவலகத்தை அணுகினோம். அவர்கள் வழிகாட்டுதலில் ஜனவரி மாதம் என் விண்ணப்பம் ஏற்கப்பட்டு எனக்கு மானியத்தை அரசு வழங்கியது. மருந்தகம் நடத்த தேவையான கடை, உள்கட்டமைப்பை ஏற்படுத்தினேன்.
எனக்கு அரசு மீண்டும் ரூ.1.5 லட்சத்திற்கான மருந்துகளை வழங்கினார். நானும் இன்று தொழில்முனைவோர் ஆனேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை நிச்சயம் வெற்றிகரமாக நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.