இனி ஆன்லைனில் வீடு வாங்கலாம்.. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் (TNHB) அதிரடி டிஜிட்டல் சேவை!
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துள்ளது. இனி வீடு அல்லது மனை வாங்க விரும்புவோர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் மாநில அரசின் திட்டங்கள் இணைந்து ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கி வருகின்றன. வழக்கமாக, இத்திட்டங்களில் 90% தொகையை அரசுகள் ஏற்கும், மீதமுள்ள 10% தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். இந்த 10% தொகையைச் செலுத்தக்கூடச் சிரமப்படும் ஏழை மக்களுக்காக, தமிழக அரசு அண்மையில் ரூ.76 கோடி நிதியை ஒதுக்கியது. இதன் மூலம் பயனாளிகள் கடன் வாங்காமலேயே சொந்த வீட்டைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. வீடு அல்லது மனை வாங்க விரும்புவோர் இதுவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்தச் சிரமத்தைக் குறைக்க, தற்போது பிரத்தியேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: https://propertysales.tnhb.tn.gov.in/ முன்பெல்லாம் விற்பனைக்குத் தயாராக உள்ள வீடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான தகவல் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்தது. அதனைத் தவிர்க்கவே இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். நீங்கள் விவரங்களைப் பதிவு செய்தவுடன், வீட்டு வசதி வாரியத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரிகளே உங்களைத் தொடர்பு கொள்வார்கள். வீட்டைத் தேர்வு செய்வது முதல், முன்பதிவு செய்வது வரை அனைத்து வழிமுறைகளையும் அவர்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்கள்.
இந்த டிஜிட்டல் முறை மூலம் இடைத்தரகர்கள் நடமாட்டம் தவிர்க்கப்படும் என்றும், பொதுமக்கள் எளிய முறையில் வெளிப்படையான முறையில் வீடுகளைப் பெற முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. விற்பனைக்குத் தயாராக இருக்கும் அனைத்து மனை மற்றும் வீடுகளின் விவரங்களும் இந்தத் தளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். சொந்த வீடு வாங்கத் திட்டமிட்டுள்ள தமிழக மக்களுக்கு, அரசின் இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.