இனி ஒருவரின் சொத்துக்களை கையகப்படுத்தும் போது 'இழப்பீடு வழங்காமல் சொத்துக்களை பறிக்க முடியாது..!
கர்நாடகாவின் பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு பெருவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம், 2003ல் முதல்கட்ட அறிக்கை வெளியிட்டது.
பின், 2005ல் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துவங்கின. ஆனால், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்பட்டது. இந்த இழப்பீடு தொகையை பெறுவதற்காக, நில உரிமையாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக நடையாய் நடக்கின்றனர்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை மட்டும் அல்ல. நம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 300-ஏ விதியின் கீழ், அது அரசியலமைப்பு உரிமை.
ஒருவரின் நிலத்தை கையகப்படுத்தும் போது சட்டப்படி உரிய இழப்பீடு தொகை வழங்காமல் அதை பறிக்க முடியாது.
இந்த விவகாரத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை, 2019, ஏப்., 22ம் தேதி சந்தை மதிப்பில் கணக்கிட்டு, உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த தொகையை கணக்கிட்டு, புதிய இழப்பீடு தொகையை இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கும்படி நிலம் கையகப்படுத்தல் சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.