இனி இந்த சாலை பெயர் 'மாண்டலின் சீனிவாசன் சாலை’..!

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு, டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா சதுக்கம் அல்லது டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா இசை மண்டலம் எனப் பெயரிட தீர்மானம் செய்யப்பட்டது.
அதேபோல் பிரபல மாண்டலின் இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் வசித்துவந்த சாலிகிராமம் குமரன் நகர் பிரதான சாலைக்கு, ‘மாண்டலின் சீனிவாசன் பிரதான சாலை’ என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட இரு தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் சென்னை மண்டல அலுவலர் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து புதிதாக பெயரிடப்பட்ட சாலைக்கு மாநகராட்சி சார்பில் விரைவில் புதிய பெயர் பலகை வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.