இனி காவலர்கள் பணிநேரத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது..!

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்து முறைப்படி பணிகளை தொடங்கினார். 8 மாடிகளிலும் ஏறி இறங்கி அலுவலக ஊழியர்களை சந்தித்து பேசினார். கேண்டீனுக்கு சென்று சாப்பாடு தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்கள் குறை கேட்கும் அறைக்கு சென்றார். அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி முதல் முறையாக குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் அலுவலகத்துக்கும் சென்று பார்வையிட்டார். சுமார் 3 மணி நேரம் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர், பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களை சந்தித்தார்.
இந்த நிலையில், பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கியமான இடங்களில் பணி செய்யும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி இருந்தனர். இதை வலியுறுத்தி இன்றும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.
பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணிகளில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச்சிதறல் ஏற்படுகிறது. பல முக்கிய பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே இதை கவனத்தில் கொண்டு அங்கு பணி செய்யும் காவலர்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது. மிக மிக முக்கிய நபர்கள் பாதுகாப்பு, போராட்டங்கள் போன்ற பணிகளின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.