இனி பயிர் கடன் பெற சிட்டா, அடங்கல் மட்டுமே அவசியம்..?

தமிழக கூட்டுறவுத் துறையானது, பயிர் கடன்களை மிககுறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவே இப்பயிர் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. அத்துடன், பயிர்க்கடன் பெறுவதில் எளிய வசதிகளையும் கூட்டுறவுத்துறை கொண்டு வந்துள்ளது... முக்கியமாக கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய "கூட்டுறவு" (Kooturavu) என்ற செயலியும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
எனினும் ஒருசில புகார்கள் அவ்வப்போது முளைத்துவிடுகின்றன.. சமீபத்தில்கூட, சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
திருப்பூர் பல்லடத்தில், இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, "விவசாயிகள், விவசாயத்தில் லாபம் பெற முடியாமல், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் இருப்பதாலேயே, தமிழக அரசு அவ்வப்போது பயிர் கடன் தள்ளுபடி செய்கிறது.
தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், விவசாயிகள் சிபில் ஸ்கோர் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும்,'சிபில் ஸ்கோரில்' பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், தேசிய வங்கிகளிலும் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும்.
எனவே சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு அப்போதே உடனடியாக விளக்கம் ஒன்றை தந்திருந்தது.. கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்த பயிர்க்கடனை பெறுவதற்கு, கூட்டுறவு வங்கிகளில், ஒரிஜினல் சிட்டா அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவை ஆவணங்களாக தேவைப்படும்.
ஆனால், ஜாமீன்தாரர் போட்டோவும் இணைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நேரில் வரவேண்டும் என்றும் தற்போது சொல்கிறார்களாம்.. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம், இவ்வாறு ஜாமீன்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுகிறது என்று புகார் கிளம்பியிருக்கிறது.
ஆனால், இந்த புகாரை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.. இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படியே ஆவணங்கள் பெறப்பட்டு, கடன் வழங்குவதாக, விளக்கம் தந்துள்ளனர்.