1. Home
  2. தமிழ்நாடு

இனி படிப்பதற்கும் சென்ட்ரல் போகலாம்... பிரம்மாண்ட 'புத்தக பூங்கா' வந்தாச்சு..!

1

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்பவர்களின் அறிவு தேடலை பூர்த்தி செய்யவும், வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் 5,100 சதுர அடியில் பிரம்மாண்ட வசதிகளுடன் கூடிய புத்தக பூங்காவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்தப் பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மக்கள் இதனை பயன்படுத்துவதை தொடர்ந்து, பிற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தவும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகம் திட்டமிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கி மாணவர்களின் அறிவுப் பசிக்கு தீர்வு கண்டார். அதே போல, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனை சங்கத்தின் சார்பில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்த புத்தக கண்காட்சி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டில் அரிய புத்தகங்கள் மற்றும் வரலாறுகளை பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச பன்னாட்டு புத்தக கண்காட்சியும் நடத்தப்பட்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில்தான், பொதுமக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அவர்களுக்கு விருப்பமான அனைத்து புத்தகங்களும் எளிதில் கிடைக்கும் வகையில் புத்தகப் பூங்கா ஒன்றை தமிழ்நாடு அரசு திறக்க உள்ளது. இது குறித்து தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அதிகாரி நம்மிடம் விவரிக்கையில், '' சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். இங்கு போதுமான இட வசதி உள்ளதால், ரயிலில் பயணம் செய்பவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் பயன்பெற வசதியாக 5,100 சதுர அடியில் பிரம்மாண்ட புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா நூலகத்தில் 10,000 புத்தகங்கள் வரை இடம் பெறும்'' என ஆச்சரியப்படுத்தினார்.

இத்தனை வகைகளா?

தொடர்ந்து பேசிய அவர், '' இந்தப் புத்தகப் பூங்காவில் அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடல் செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், பன்னாட்டுப் பொருளாதாரம். வணிகவியல், தமிழ் வரலாறு, உலக வரலாறு, இந்திய வரலாறு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி தொடர்பான நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை உள்ளிட்ட பல்வகை நூல்கள் இடம் பெறும். பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தால் அச்சிடப்படும் பாடப்புத்தகங்களும் விற்பனை செய்யப்படும். மேலும் பிற புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் அயல்நாட்டு புத்தகக் கண்காட்சிகள் மூலம் மொழி பெயர்க்கப்பட்ட பிற உலக மொழி புத்தகங்களும் இடம்பெறும்.

10 சதவீதம் தள்ளுபடி

புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இங்கு அரங்குகளில் தங்களின் புத்தகங்களை வைத்து விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 14-க்கும் மேற்பட்டோர் தங்களின் புத்தகங்களை வைத்து விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கட்டாயம் வழங்கப்படும்.

புத்தகப் பூங்கா நேரம்

இந்த புத்தகப் பூங்கா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். புத்தக பூங்காவுக்கு வரும் பொது மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சிற்றுண்டியகம், வைஃபை வசதி, சிறிய அளவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக 75 பேர் அமரக் கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்?

இந்த புத்தக பூங்காவில் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதனால், அனைத்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக் கூடிய குழல் உருவாகும். இந்த புத்தக பூங்கா விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பூங்கா முழுவதுமாக குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை ஆகிய அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தால் இந்த புத்தக பூங்கா நிர்வாகம் செய்யப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பு பொறுத்து பிற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புத்தகப் பூங்கா அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like